சென்னை: மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 23 அன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் 57 லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர்.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த தடுப்பூசி முகாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கடந்த தடுப்பூசி முகாம்களில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஐந்தாவது தடுப்பூசி முகாமில் 11 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டனர்.
தடுப்பூசி செலுத்தியவர் விபரம்
இந்நிலையில் அக்டோபர் 23 நடைபெறும் மிகப்பெரிய தடுப்பூசி முகாமில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 76 விழுக்காடும் இரண்டாம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 31 விழுக்காடாகவும் உள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த அதிமுக ஆட்சியில் 103 நாள்கள் தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டதனால் 68 விழுகாட்டு மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 26 விழிக்காடு பேர் செலுத்தியுள்ளனர்.