அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் உருவாகியுள்ளதாகவும், அது குறித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது எனவும், பரிசோதனையின் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று முன்தினம் மாலை மருத்துவ பரிசோதனைக்காக சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகள் செய்த பின்பு, சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவரை இன்னும் சில பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவினரால் இருதயவியல் பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குறையாத ரத்த அழுத்தம், குடல் புண், வயிற்றுப்புண் பிரச்னைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதற்காக தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்பொழுது, "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை குறித்தும், இருதய நோய் பாதிப்பு குறித்தும் மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் மருத்துவக் குழு இன்று ஆய்வு செய்து மாலை அறிக்கை வெளியிடப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:வள்ளி கும்மி ஆட்ட உறுதிமொழி சர்ச்சை; கே.சி.சி பாலு அளித்த விளக்கம் என்ன?