சென்னை: தமிழ்நாட்டில் இந்தாண்டும் டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் இருந்தாலும், செப்படம்பர் 10ஆம் தேதி வரையில் 253 பேர் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், 3 பேர் இறந்துள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கடந்த 69 ஆண்டுகளாக இந்தியாவின் 2ஆவது பழமையான புற்றுநோய் மருத்துவமனை என்னும் சிறப்போடு புற்றுநோய்க்கு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறது. குறிப்பாக ஒரு ஆண்டிற்கு 1,60,000 பேர் இந்த மருத்துவமனையில் புற்றுநோய்களுக்கு தொடர் சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 16,000 புதிய புற்றுநோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்குவதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் செய்திருந்தாலும், கூடுதலான வசதிகள் ஏற்படுத்தும் வகையில், 2023-24 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் தங்க வைப்பதற்கும், ரூ.1.5 கோடி செலவில், புதிய தங்குமிடம் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது தற்போது ஆய்வு செய்யப்பட்டது.
மிக விரைவில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, கழிப்பிட மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் தங்குமிட கட்டிடம் கட்டப்படவுள்ளது. இந்த மருத்துவமனையின் நடமாடும் வாகனத்தின் மூலமும் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரவாயல் பகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 144 வது வட்டத்தை சேர்ந்த, 4 வயது சிறுவன் ரக்சன் டெங்கு பாதிப்பால் நேற்று மரணமடைந்துள்ளான். கடந்த 2ஆம் தேதி டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு குறையாத காரணத்தால், எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 9ஆம் தேதியன்று இரவு 8.45 மணியளவில் இந்த குழந்தை மரணடைந்துள்ளது என்பது வருத்தத்திற்குரியது.
டெங்கு பாதிப்பு என்பது உலகம் முழுவதிலுமே மழைக்காலங்களிலும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு வடகிழக்கு பருவ மழையின் போதும் தொடங்குகின்ற ஒன்றாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் இருந்தாலும், நேற்று வரை 253 பேர் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளையும் மிகத் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு, கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு டெங்கு பாதிப்பினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைத்து வருகின்றனர்.
வரும் 16ஆம் தேதி அன்று ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர் நலப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் என்று ஒட்டுமொத்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.