சென்னை:திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட குடிசைவாழ் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஆரவாரம் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிசைப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில், மருத்துவ முகாம் ஐந்து விளக்கு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையான நாளாக அமையும்.
அடுத்த பிறந்தநாளை அமைச்சராக உதயநிதி கொண்டாடினால் மகிழ்ச்சிதான். அமைச்சராகும் அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது. திமுகவின் அடித்தளம் வலுவாக இருக்க 30 லட்சம் இளைஞர்கள் உழைக்கின்ற உயிரோட்டமுள்ள அமைப்பாக இளைஞரணி உள்ளது. பிற கட்சிகள்போல சம்பிரதாயத்திற்கு இருக்கும் அமைப்பு அல்ல திமுக இளைஞரணி. சமுதாயத்திற்காக உழைக்கும் அமைப்பு. 30 லட்சம் இளைஞர்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் தலைவராக இருப்பதால், அமைச்சராவதற்கு எல்லா தகுதிகளும் கொண்டவர் உதயநிதி.
சீனாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், கொரோனா பூஜ்ஜிய நிலையை நோக்கியே தமிழ்நாடு செல்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளை உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் தளர்த்தி வருகிறது” என்றார்.