சென்னை:அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, இந்திய மருத்துவத்துறை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் பல்வேறு அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி யோகா, இயற்கை மருத்துவம் போன்ற ஐந்து வகையான மருத்துவத்திற்கும் கல்லூரிகள் உள்ளன.
யோக மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பில் இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 17 தனியார் கல்லூரிகளும் உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு தனி கல்லூரிகளை தொடங்கினார். மேலும், 2006 ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் மூலம், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடிய 36 பூங்காக்களில் யோகா மேடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இலவசமாக யோகா செய்யும் முறை கொண்டுவரப்பட்டது.
மாணவர்கள் மற்றும் தாய்மார்களுக்கு யோகா: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் யோகா பயிற்சி பாடத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டது. மகப்பேறு மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் வரும் தாய்மார்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதனால், தாய்மார்கள் சுகப்பிரசவம் அடைந்தனர். இந்த முறை தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மசோதா நிலை :தமிழ்நாட்டிற்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்று வேண்டும் என்கிற வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அதற்கான மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார். ஆளுநர் அந்த மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்கிறார் என்பதால் அனுமதிக்க முடியாது எனவும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஏற்கனவே மீன்வளப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தவுடன் அதனைத் தொடங்குவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது. பல்கலைக்கழகத்திற்கான நிர்வாக அலுவலக கட்டிடம் அறிஞர் அண்ணா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.