சென்னை:உயிர் காக்கும் உன்னத சேவையில் 108 ஆம்புலன்சின் 15வது ஆண்டு விழா ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெங்குவால் இந்த ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 3,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 300 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
அவர்கள் அனைவருமே நலமுடன் உள்ளனர். தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளோம். அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கற்க உள்ளனர்.
கட்டடங்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்ய பொதுப்பணித்துறை, மாநகராட்சி , வீட்டு வசதி உள்ளிட்ட துறை அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொசு ஒழிப்பு பணிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தை தீவிர நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்.