தமிழ்நாடு

tamil nadu

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8 ஆயிரமாக உயர்வு- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

By

Published : Aug 18, 2023, 5:29 PM IST

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து ராமநாதபுரம் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 18) நடத்தும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு அறிவிப்புகளையும் வழங்கினார்.

அறிவிப்பில் முதலமைச்சர் கூறியதாவது, மீனவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேர் வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும். 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும். மேலும், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கபடும் என அறிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் கூறிய முக்கிய அறிவிப்பான நிவாரணத் தொகையை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார்.

அதனைதொடர்ந்து, 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும். மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

மானிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெய் அளவை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

மேலும், தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணி, குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வுப் பணி மற்றும் பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அதனைதொடர்ந்து மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், மீன் பிடிக்கையில் காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றார். மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு காரணமாக இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் பணிகளை விரைவில் தொடங்குவோம் என்றார்.

இந்த அறிவிப்புகள் மூலமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். இதற்காக மொத்தம் 926 கோடியே 88 லட்சம் ரூபாய் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறோ. இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என முதல்வர் மீனவ மக்களிடையே கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

ABOUT THE AUTHOR

...view details