பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, பெரியார் பிறந்தநாளாகிய இந்த தன்மான திருநாளில் அவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு பெரியார் பாதுகாத்து வந்த சுயமரியாதை, சமூகநீதியைக் காக்க நாங்கள் உறுதி ஏற்கிறோம்.
மதிமுக இயக்கம் தொடங்கியதிலிருந்து துளியளவும் வன்முறையில் ஈடுபட்டதில்லை. அதேபோல் எந்த கடைத் தெருவுக்கும் சென்று கட்டாய வசூல் செய்தது கிடையாது. நான் 30 முறை கைதாகி இருக்கிறேன். எந்த இடத்திலும் ஒரு முறை கூட ஒரு பேருந்தின் மீதும் கல் வீசியது கிடையாது. நாங்கள் வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்கி காவல்துறையினரிடம் மோதிக் கொண்டதும் இல்லை.அப்படியிருக்கையில்மாநாட்டு வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த கொடிகளை மாநாகராட்சி பணியாளர்கள் அகற்றுகின்ற போது மதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதாக ஒரு ஆங்கில பத்திரிகை கூறுகிறது.
நடைபெற்ற மாநாட்டில் பந்தலுக்கு போகின்ற வழியில் உள்ள கொடிமரங்களை மாநாகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். இதை யார் தான் சகிப்பார்கள். இதனால் அங்கிருந்த தொண்டர்கள் ஆத்திரமடைந்து அவர்களைத் தடுத்துள்ளனர். கொடி அவனுக்கு உயிர். அதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் எங்கள் தோழர் ஒருவருடைய இடது தோள்பட்டை உடைந்து அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.