சென்னை:பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒற்றை சாளர முறை கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் 1 லட்சத்து 650 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 53 ஆயிரத்து 628 இடங்கள் காலியாக உள்ளன. 22 ந் தேதி வரையில் 88 ஆயிரத்து 843 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 11 ஆயிரத்து 807 மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டி உள்ளது.
21வது நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஐடி துறையின் வளர்ச்சியால், பொறியியல் மாணவர்களுக்கு படிப்பை முடித்த உடன் வேலை, நல்ல சம்பளம், சமூகத்தில் மதிப்பு போன்றவை கிடைத்தன. இதனால் தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல் பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. ஆனால் நாளடைவில் படிப்படியாக குறைந்த டிமாண்ட் தற்போது கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க ஆள்வைத்து தேட வேண்டும் என்ற நிலை உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டிற்கு முன்னர் 500க்கும் அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது 446 என்ற அளவிற்கு குறைந்திருக்கிறது. கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, கல்வித் தரமும், உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்காததால், தரமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமை , தாெழில்துறைக்கு தேவையான வகையில் தயார் செய்யாமை போன்றவற்றால் திறன் மிகுந்த இளைஞர்கள் தயாராகவில்லை என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய உயர்கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், நிறைய கல்லூரியில் ஒற்றை, இரட்டை இலக்க எண்ணில் மாணவர்கள் சேர்க்கை இருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது கல்லூரிகளில் உட்கட்டமைப்பினை வைத்து, ஆசிரியர்களுக்கு சம்பளம் அளித்து செயல்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்புகிறார். கலந்தாய்வு முறையில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.