சென்னை:ஆவின் நிறுவன ஊழல்கள் குறித்து தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறியிருப்பதாவது,
"சேலத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையை பார்வையிட்ட தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி. சா.மு.நாசர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,1.5 டன் இனிப்புகளைத் தனது சொந்த பயன்பாட்டுக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், அது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் 2019 - 20 நிதியாண்டில் மட்டும் தீபாவளி பரிசு வழங்க தோல் பை வாங்கிய வகையில் சுமார் ரூ. 49 லட்சம் செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டியிருப்பது அந்த ஆண்டின் தணிக்கைத்துறை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதே போன்று பல்வேறு விஷயங்களில் தேவையற்ற செலவுகளைச் செய்து ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது ஆவின் தணிக்கைத் துறையின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அறிக்கையாக இருப்பதால், அதனை பெற்று லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டால், ஆவின் நிறுவனத்தின் பல்வேறு ஊழல்கள் வெளியே வரும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஆவின் பால் பண்ணைகள் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் சா.மு. நாசர்