சென்னை:பல்லாவரத்தில் வசித்து வருபவர் டாக்டர் மேகசியான் (வயது 33). இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தாரணியும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று (நவ. 3) பல்லாவரம் ரேடியல் சாலையில், துரைப்பாக்கம் நோக்கி சென்று கொண்டு இருந்த டாக்டர் தம்பதியினரின்கார் மீது லாரி லேசாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர் மேகசியானுக்கும், லாரி டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து இருவரும் தங்களின் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது டாக்டர் மேகசியான், பல்லாவரம் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து உள்ளார். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லாரி டிரைவர் லாரியை எடுத்துக் கொண்டு தப்பித்து செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதை கண்ட தம்பதியினர் லாரியை மடக்கி காவல் துறையினர் வந்ததும் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றி லாரி டிரைவர் தம்பதியினரை தகாத வார்த்தையால் பேசியதாக சொல்லப்படுகிறது.