சென்னை: போரூர் ஏரி அருகே உள்ள சிக்னல் சந்திப்பில் நேற்று (ஆகஸ்ட் 30) மதியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பகவதி பெருமாள், தலைமைக் காவலர்கள் சந்திரசேகர், இளங்கோ, லிங்கா, குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அந்தப் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்றுவருவதால் சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அப்போது மகாராஷ்டிர மாநிலப் பதிவெண் கொண்ட லாரி சர்வீஸ் சாலையில் செல்ல முற்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் லாரியை நிறுத்தி மாற்றுச் சாலையில் செல்லும்படி அறிவுறுத்தினர். போரூரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணியினால் குழுக்களாய் மாறிய சாலைகளால் குழம்பிப்போன வடமாநிலத்தவர் மொழி புரியாததாலும், வழி தெரியாததாலும் செய்வதறியாது திகைத்துள்ளார்.
மேலும் அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் வாக்குவாதம் செய்ததோடு இந்தியில் லாரி ஓட்டுநரைத் தகாத சொற்களால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் லாரி ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அந்த லாரியின் ஓட்டுநர் போக்குவரத்துக் காவலரின் பேச்சை மதிக்காமல் சர்வீஸ் சாலையிலேயே செல்ல முயன்றார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஓட்டுநர் போக்குவரத்துக் காவலரை கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது சாலையிலிருந்த பொதுமக்கள் லாரி ஓட்டுநருக்கு அடி-உதை கொடுத்து எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.