சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்காக தற்போதைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்து முடித்துள்ளார். இந்த சூழலில், குண்டர்கள் சிலர் அத்துமீறி அதிமுக அலுவலகத்தை சூறையாடப்போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காவல் ஆணையரிடம் மனு அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த ஜூலை மாதம் ஓபிஎஸ் தலைமையிலான குண்டர்கள் அதிமுக அலுவலகத்தை சூறையாடினர்.
அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி அலுவலக கதவுகளை உடைத்து உள்ளே சென்று அறைகள், ஆவணங்கள் மற்றும் விலை மதிப்புள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசு பொருட்களை தூக்கி சென்றனர். அதே ஓபிஎஸ் தலைமையிலான தீய சக்திகள் மீண்டும் அலுவலகத்தை சூறையாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிமுக அலுவலகத்தில் பொது செயலாளர் பதவிக்கான தேர்தல் முடியும் வரை தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளோம்.
அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் முடியும் வரை பாதுகாப்பு அளிப்பதாக காவல் ஆணையர் நம்பிக்கை அளித்துள்ளதாக அவர் கூறினார். கடல் அரிப்பால் கூடங்குளம் மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. புண்ணாக்கு விலையை ஏற்றிய புண்ணாக்கு திமுக அரசு பால் கொள்முதல் விலையை ஏற்றவில்லை. 12ஆம் வகுப்பு தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்றால் என்ன காரணம் என்பதை கல்வித்துறை ஆய்வு செய்ய வேண்டும். அதனை ஆய்வு செய்யாமல் மூன்று நாட்கள் வந்தாலே 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் கொடுக்கப்படும் என கூறுவது நிர்வாகத்தின் சீர்கேடு.
அன்பில் மகேஷ் பொய்யாமொழிபள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்காமல் உதயநிதி புகழ் பாடுகின்ற ரசிகராக மட்டுமே இருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நடத்திய தேர்தல் வழிமுறைகளை பின்பற்றியே இந்த அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலும் நடைபெறுகிறது. திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என்பது நேற்று நிரூபணமாகியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துக்கம் விசாரிக்க ஓபிஎஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் ஓபிஎஸ் வீட்டில் அனைவரும் சிரிப்பலையில் இருந்துள்ளனர். இதை பார்த்தால் அரசியல் விவாதமாக அந்த நிகழ்வு இருப்பது போல தோன்றுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் கே.என். நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? - ஜெயக்குமார்