சென்னை:தமிழ்நாட்டையே உலுக்கி வரும் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து, அதன் ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக கூறினார்.
அப்போது பேசிய ஐஜிஆசியம்மாள், “ஆருத்ரா கோல்டு டிரேடிங் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி வழக்கில், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6.35 கோடி ரூபாய் பணம், 1.13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், 22 கார்கள், 96 கோடி ரூபாய் வங்கி கணக்கு வைப்பில் இருந்த பணம் ஆகியவை முடக்கம் செய்து, 103 அசையாச்சொத்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஹிஜாவு நிதி நிறுவனம் 4,400 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 3 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 448 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 80 லட்சம் மதிப்புள்ள எட்டு கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 162 வங்கிக் கணக்குகளில் இருந்த 14.47 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், 75.6 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள், 90 கோடி ரூபாய் மதிப்புள்ள 54 அசையும் சொத்துகள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். எல்.என்.எஸ் நிதி நிறுவனம் 5 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 இயக்குநர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 1.14 கோடி ரூபாய் பணம், 34 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க தங்கம், வெள்ளிப் பொருட்கள், 18 கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 791 வங்கிக் கணக்குகளில் இருந்த ரொக்கம் மற்றும் முதலீடு தொகை என மொத்தம் 121 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. 38.49 கோடி ரூபாயிலான அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆம்ரோ கிங் அசோசியேட்ஸ் லிமிடெட் நிறுவனம் 161 கோடி ரூபாய் மோசடி வழக்குத் தொடர்பாக இயக்குநர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 49 கிராம் தங்க நகைகள், 450 கிராம் வெள்ளிப் பொருட்கள், ஒரு சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, சொத்துகளை முடக்க இருக்கிறோம்.
ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் 427 முதலீட்டாளர்களிடம் இருந்து 6.5 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், 7.5 லட்சம் ரூபாய் பணம், 80 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க தங்கம், வெள்ளிப் பொருட்கள், வங்கிக் கணக்கில் இருந்த 3 லட்சம் ரூபாய் ஆகியவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆல்வின் ஞானதுரை மற்றும் ராபின் ஆரோன் ஆகியோரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட எல்பின் லிமிடெட் நிதி நிறுவனம் 962 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு, 400 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 139 கோடி மதிப்பிலான 257 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூரைச் சேர்ந்த ரஹத் ட்ரான்ஸ்போர்ட் நிதி நிறுவனம் 411 கோடி மோசடி தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 153 வாகனங்களில் 43 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, மற்ற வாகனங்களைப் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், 65 ஏக்கர் அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சி.வி.ஆர்.எஸ் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் 48 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 30 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. ஐஎப்எஸ் வழக்கில் விசாரணை அதிகாரியான கபிலன் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர் விசாரித்த அனைத்து வழக்குகளையும் மீண்டும் புது விசாரணை அதிகாரி விசாரிக்கத் தொடங்கி உள்ளார். அதன் அடிப்படையில் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் விசாரணைக்காக பலமுறை அழைக்கப்பட்டும் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் ஆஜராகாததால், துபாயில் இருக்கும் அவரை பிடித்து விசாரணை செய்ய லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.