தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, வேலூர் விழுப்புரம் உள்பட ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் வருகிற 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவர், மூன்றாயிரத்து 597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு இன்று காலை வேட்பு மனுக்கள் தரப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியபட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 30ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் இம்மாதம் 27ஆம் தேதி தருமபுரி, அரூர், கடத்தூர், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களிலும் 30ஆம் தேதி ஏரியூர், காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் தாலுகாக்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 2811 உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனு விண்ணப்பங்கள் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றிய அலுவலகங்களில் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் ஒரு ரூபாய் செலுத்தி வேட்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாள் என்பதால் வேட்புமனு விண்ணப்பங்கள் வாங்க ஒரு சிலரே வந்திருந்தனர்.