தமிழ்நாடு

tamil nadu

இலங்கை - தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: எல்.முருகன்

By

Published : Feb 12, 2023, 1:17 PM IST

இலங்கை - தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை தொடர்பாக விரைவில் இரு நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

எல்.முருகன்
எல்.முருகன்

சென்னை:இலங்கை யாழ்ப்பாணத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றனர். அதன்பின் இன்று அதிகாலை சென்னை திரும்பினர். இவர்களை சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பளித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "முழுமையாக இந்திய அரசு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மையமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக கலாச்சார மையமானது கொடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற போது அடிக்கல் நாட்டினார். அப்பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கலாச்சார மையமானது 11 மாடிக்கட்டிடத்துடன் பிரம்மாண்டமாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் மொழி கலைகளுக்காக தனி இடங்களுடன் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கலாச்சார மையம் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் அதிபர் கலந்து கொண்டார். நேற்றைய தினம் வரை இலங்கை சிறையில் மீனவர்கள் யாரும் இல்லை. மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து ஏற்கனவே பேசியுள்ளோம்.

மேலும் 2 நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவில் கூட்டப்பட உள்ளது. 2 நாடுகளும் முன்வைத்துள்ள சில முக்கிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். தொடர்ந்து பேசிய அவர், காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. அது பசுக்களை அரவணைக்கும் என்ற நோக்கில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்வார்கள்: மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details