தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளை கண்டுகொள்ளாததால் சந்திக்கப் போகும் பேராபத்து; தீர்வு என்ன? - விவசாயிகள்

விவசாயம் அல்லாத பல பொருள்களின் விலைகள் பெருமளவு உயர்ந்து வரும் நிலையில், தவிர்க்கமுடியாத ஒன்றான விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. ஏற்கனவே பல பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் விவசாயிகளின் மனதை இது மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது.

விவசாயிகளை கண்டுகொள்ளாததால் சந்திக்கப் போகும் பேராபத்து; தீர்வு என்ன?
விவசாயிகளை கண்டுகொள்ளாததால் சந்திக்கப் போகும் பேராபத்து; தீர்வு என்ன?

By

Published : Jul 28, 2021, 7:42 PM IST

சென்னை: Mission IT - Rural எனும் அமைப்பைச் சேர்ந்த திருச்செல்வம் ராமு என்பவர் விவசாயிகள் நலனை கருத்தில் கொள்ளாததால் நாடு சந்திக்கப் போகும் பேராபத்து குறித்தும்; அதை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Covid 19 பேரதிர்வுகள் இரன்டு முக்கிய விஷயங்களை மனிதர்களுக்கு உணர்த்தியிருக்கின்றன. வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது இன்னமும் உணவுதான்; Covid 19 நுண்கிருமியை வெற்றிகொள்ள உடலின் நோய் எதிர்ப்புத்திறன் மிக முக்கியம். மக்கள் பாரம்பரிய உணவுகள், இயற்கை முறையில் விளைவித்த உணவுகளை தேடி ஓட ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே உணவு என்பதை தாண்டி தரமான, சத்தான உணவு என்பது இன்றைய உலகின் அடிப்படைத் தேவை என்கிற சூழல் உருவாகியுள்ளது. நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறபோதிலும், அதை பொருட்படுத்தாது சாத்தியப்படுத்திக்கொண்டிருப்பது விவசாயிகள்தான்.

கடந்த இரண்டு அலைகளின் போது அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மக்களின் வருமானம் குறைந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள், நோய் பரவும் அபாயம் போன்றவற்றால் மக்கள் வெளியே செல்வதும் குறைந்ததால், விவசாய விளைபொருள்களின் விலை வீழ்ச்சி, விளைபொருள்கள் வீணாவதற்கு வழிவகுத்தது. இன்னொருபுறம், வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை, அதிக சம்பளம், விலை பொருளை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்வதில் இருந்த சிரமம் போன்றவற்றால் பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் விடும் சூழலை பார்க்க முடிந்தது.

விவசாயம் அல்லாத பல பொருள்களின் விலைகள் பெருமளவு உயர்ந்து வரும் நிலையில், தவிர்க்கமுடியாத ஒன்றான விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. ஏற்கனவே பல பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் விவசாயிகளின் மனதை இது மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிற செய்தி பரவி வரும் நிலையில், பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒருநிலை வருமேயானால் சுதந்திர இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து இதுவாகத்தான் இருக்கும்.

அத்தகைய பேராபத்தை தவிர்ப்பதற்கு, விவசாயிகளுக்கு நம்பிக்கை வழங்கும் விதமான முழு தீர்வை விரைந்து உருவாக்குதல் அவசியம். அதனடிப்படையில் சில முக்கியமான விஷயங்களை தங்கள் கனிவான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்:

விவசாயத்துறை கட்டமைப்பு மற்றும் செயல்பாடு:

i) விவசாயம் பருவகாலம் சார்ந்த தொழில். மழை பெய்தவுடன் ஒரே நேரத்தில் பெரும்பாலான விவசாயிகள் செயல்பட ஆரம்பிப்பார்கள். அதிக எண்ணிக்கையிலானவர்கள் குறுகிய காலத்திற்குள் தேவைப்படுவதால், தற்போது ஒன்றிய அளவில் இருந்துகொண்டு சில அலுவலர்களோடு செயல்படும் கட்டமைப்பால் இதை சமாளிக்க இயலாமல் போகிறது. உடனடி தேவை, விவசாயத்துறையின் கட்டமைப்பை கிராம அளவிற்கு விரிவாக்கம் செய்தல் மற்றும் திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்யும் வரையிலான தேவைகளை கிராம அளவிலேயே பெற்று நல்ல தரம் மற்றும் அதிக விளைச்சல், உரிய விலை மற்றும் விவசாயப் பணிகளை எளிதில் மேற்கொள்ளும் சூழல் போன்றவற்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

ii) புது திட்டங்களை உருவாக்கும்போது அவற்றை செயல்படுத்துவதற்கான தகுதியானவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக தேர்வு செய்யவேண்டும். தற்போது, பெரும்பாலும் ஏற்கனவே இருக்கும் அலுவலர்களிடமே பணி ஒப்படைக்கப்படுவதால் அவர்கள் ஏற்கனவே கவனித்துவந்த திட்டங்கள் முக்கியத்துவம் இழந்து அதில் முதலீடு செய்யப்பட்ட நிதி, நேரம் வீணாகிறது.

iii) தேவைக்கு ஏற்ற உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நிகர லாபம் - இவற்றை இலக்காகக் கொண்ட ஒரு புதுத்துறை ஏற்படுத்துதல்; அதன் மூலம் நிர்வாக வசதிக்காக பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் விவசாயத்துறை ஒருங்கிணைக்கப்படுத்தல் மூலம் செயல்திறன் அதிகரிக்கும். செயல்பாடுகளின் விளைவை பொறுப்பேற்கும் சூழல் உருவாகும்.

தண்ணீர் ஆதாரம்: இன்றைய விவசாயப் பிரச்னையின் முக்கிய காரணிகளில் ஒன்றாக தண்ணீர் மாறியிருக்கிறது. மழை நீர், நதி நீர், கிராம நீர்நிலைகள், நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் ஒவ்வொரு பிரச்னையை கொண்டிருக்கின்றன. கிராம அளவில் அதிக மரங்கள் வளர்த்தல், நதி நீர் பங்கீடு நியாயமானதாக, சிக்கல்கள் இல்லாதபடி இருக்க வழி வகுத்தல், கிராம நீர்நிலைகள் முழு திறனுடன் செயல்பட கிராம மக்கள் ஈடுபாட்டுடன் கூடிய மராமத்து பணிகள் மற்றும் பராமரித்தலுக்கான புதிய செயல் திட்டத்தை உருவாக்குதல். பொது பாசன வழிமுறைகளை நவீனப்படுத்தும் முயற்சிகள், ஆள் துளை கிணறுகளின் ஆழம் தொடர்பான சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் உடனடியாக தேவைப்படுகின்றன.

இயற்கை வேளாண்மை:வயிற்றுக்கு, ருசிக்கு, ஆற்றலுக்கு உணவு என்கிற நிலை மாறி, வரும் புதுப்புது கிருமிகளை எதிர்கொள்ள, தரமான சத்தான உணவு என்கிற சூழல் உருவாகியுள்ள நிலையில், பாரம்பரிய விதை ரகங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட வேண்டியதுள்ளது. அது தொடர்பான மிகப்பெரிய திட்டங்கள் தேசிய அளவில் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம். இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கக்கூடிய அமைப்புகள் ஒன்றிய/ மாவட்ட அளவில் உருவாக்கப்பட வேண்டும். இயற்கையான முறையில் விளைந்ததை உறுதிப்படுத்தும் அமைப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

விளைபொருள் விலை: தேவைக்கேற்ற விளைச்சல் இருக்கும் போது சந்தையே உரிய விலையை கொடுக்கிறது எனும்போது தேவையின் அடிப்படையில் விவசாயிகளை பயிரை தேர்ந்தெடுக்க வைக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தலே நிரந்தர தீர்வாக அமையும். மேலும் அறுவடை நேரத்தில் பல விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்கு வருவதால், தற்காலிக விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும் நாட்டம் ஏற்படுகிறது. இவற்றை சமாளிப்பதற்கு 'live crop variety production data ' எனும் தகவலை விவசாயிகளுக்கு கிராம அளவில் வழங்குவது மிக அவசியமாகிறது. கிராம அளவில் விவசாயத்திற்கிற்கென நிரந்தர கட்டமைப்பு இருக்கும்போது இடுபொருள் , விளைபொருள் விற்பனைக்கு தேவைப்படும் நம்பிக்கையை ஏற்படுத்துவது சாத்தியமாகும்.

விவசாயக் கடன் மற்றும் பயிர் காப்பீடு: விவசாயக்கடன் பெரும் விவசாயி அந்த தொகையை விவசாயப்பணிகளுக்கு செலவு செய்கிறாரா என தெரியாது; நல்ல தரமான விதை, உரங்கள் கிடைக்குமா என தெரியாது; வேலை ஆட்கள், எந்திரங்கள் உரிய காலத்தில் கிடைக்குமா என தெரியாது; மழை சரியான அளவு இருக்குமா என தெரியாது; எவ்வளவு மகசூல் கிடைக்கும் என்பது உறுதியாக தெரியாது; என்ன விலை கிடைக்கும் என்பது தெரியாது. இந்த மாதிரி பல தெரியாது இருக்கும் ஒரு தொழிலுக்கு விவசாயக் கடன் எதற்கு அரசு வழங்குகிறது? இதற்கான காரணங்களை யோசிக்காமல், விவசாயக்கடனை தள்ளுபடி செய்தால் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறையும்; விவசாயிகள் அரசை ஏமாற்ற நினைக்கிறார்கள் என்ற ரீதியில் சிந்திப்பது சரியானதாக இருக்காது. நாட்டின் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் துறை இன்றளவும் விவசாயத் துறைதான்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் உணவுப் பாதுகாப்பை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்பவர்கள் விவசாயிகள். இதன் ஆபத்தை, பாதிப்பை விவசாயிகள் மட்டுமே ஏற்பதாக இருக்கும் நிலையை சமாளிப்பதற்காக வெளியான பயிர்க் காப்பீடு வலிமையானதாக, முழுமையானதாக இல்லை. மேலும் பயிர்க் காப்பீட்டில் தனியார் நிறுவனங்கள் வருகை என்பது தற்போதைய சூழலில் உகந்தது அல்ல. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் அதிக புகார்கள் வருவது பயிர் காப்பீடு தொடர்பானவையாக இருப்பதை காண முடியும்.

தனியார் நிறுவங்கள் ஈடுபாடு: வெளிநாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இவற்றுடன் இணைந்து விவசாய தீர்வு சார்ந்த திட்டங்களை அரசு செயல்படுத்த முனையும்போது போராட்டங்கள் நடக்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது தனியார் நிறுவங்களின் கடந்த கால செயல்பாடுகள். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்குவதில் உள்ள தாமதம், நிலங்கள் கையகப்படுத்தும்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை போன்றவை தனியார் துறை என்றாலே ஒருவித எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசிடம் தங்கள் பிரச்னையை கூறி தீர்வு பெற உரிமையுள்ளது; தனியார் நிறுவனங்களிடம் அது இருக்காது என நம்புகின்றனர். இது ஒரு முக்கிய காரணம்.

வேண்டுதல்: மேற்கண்ட விஷயங்களுக்கு தீர்வு காணாமல், அதிக நிதி ஒதுக்குவது, சிறு சிறு விவசாய தீர்வுகளை செயல்படுத்துவது போன்றவை பண விரயத்திற்கும், கால விரயத்திற்கும் வழிவகுத்து பிரச்னையை மேலும் பெரிதாக்க காரணமாகிவிடும். அரசு கொண்டுவந்த திட்டங்களிலேயே மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. 2022 ற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும்' திட்டம். இன்னும் ஒருவருடமே மீதமுள்ள நிலையில் அத்திட்டம் குறித்த சிறப்பு நாடாளுமன்ற விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்படுமேயானால், அது தற்போதைய விவசாயப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துகொள்வதற்கும், தீர்விற்கும் புதிய, தேசிய அளவிலான அணுகுமுறைக்கும் வழிவகுக்கும். Covid 19 மூன்றாம் அலை உருவாகும் பேராபத்து உள்ள நிலையில், தங்களது கனிவான நடவடிக்கையால் சர்வவல்லமை பொருந்திய நாடாளுமன்றம் விவசாயத் தீர்வை நாட்டிற்கு ஏற்படுத்தி தரும் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சோனியா - மம்தா சந்திப்பு: பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details