சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "அனைத்து கல்லூரிகளிலும் இளநிலை இரண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டன.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
2021-22 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அரசின் நிலையான கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி (orientation) வழங்க கல்லூரி முதல்வர்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி வளாகங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளி பின்பற்றுவதை கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் " என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் பள்ளி திட்டம் - வீடு தேடிவரும் ஆசிரியர்கள்