சென்னை:தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் இதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு வசதிகளுடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும் சில இடங்களில், அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்துகின்றன.
மயிலாடுதுறையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் அக்.4 ஆம் தேதி நாட்டு வெடி தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கரமான வெடிவிபத்தில் அங்கு பணி செய்துகொண்டு இருந்த மதன், மாணிக்கம், மகேஷ், ராகவன் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொறையார் போலீசார் இவ்விபத்து குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடிவிபத்தில் 16 பேர் பலி:கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அத்திப்பள்ளியில் செயல்பட்டு வந்த பாலாஜி என்ற பட்டாசு கடையில் அக்.7ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சரக்கு வாகனத்தில் இருந்து கண்டெய்னர் வாகனத்திற்கு பட்டாசுகளை மாற்றும்போது ஏற்பட்ட இந்த பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்தில் அக்.12ஆம் தேதி வரையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, இந்த கோர விபத்துக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தனது X பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தார். தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரியலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் பலி:அடுத்ததாக, அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலையில் அக்.9ல் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குதலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகரின் இருவேறு இடங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 11 பேர் பலி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி வட்டம், மங்களம் கிராமம் ஆகிய இருவேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் இன்று (17-10-2023) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சிவகாசியில் 2 இடங்களில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!