சென்னை: 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு பல்வேறு சாதனைகளை படைத்திருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது சாதிய வன்கொடுமைகள். அமைதிப்பூங்கா என்று புகழப்பட்ட தமிழ்நாட்டில் தொடர்சியாக நடந்தேறிய சாதிய வன்கொடுமைகளால், அஞ்சாதோர் யாருமிலர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பின் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்கள் அனுமதிக்கபட்டனர். அதைத்தொடர்ந்து, இந்தாண்டு வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று வழங்கிய தீர்ப்பு பரவலான வரவேற்பைப் பெற்றது. இப்படி, ஒரு பக்கம் பட்டியலின மக்களுக்கான நியாயங்கள் கிடைத்தாலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னும் சாதிய வன்கொடுமைகள் தலைதூக்கி வருவது வேதனைக்குரிய ஒன்றே.
இந்தாண்டு தொடக்கச் சம்பவமாக தென் மாவட்டங்களின் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுவக்குறிச்சி என்னும் கிராமத்தில் ஆரம்பித்தது. இந்த கிராமத்தில் உயிரிழந்த 72 வயது மதிக்கத்தக்க பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடல் பொது பாதையில் எடுத்துச் செல்ல அந்த கிராமத்தில் உள்ள மற்றொரு சமூகத்தினர் மறுப்பு தெரிவித்து வெடித்த சம்பவம் இந்தாண்டின் துவக்க சம்பவமாக அமைந்தது.
குறிப்பாக படித்து முன்னேற்றம் காண வேண்டிய மாணவர்களின் கண்களில் சாதிய வன்கொடுமை நிரம்பியிருப்பது கூடுதல் வேதனையை அளிக்கிறது. குழந்தைகளை திருத்திவிடலாம் என்று மனதை அமைதிப்படுத்தினால், இவ்வழக்கங்களை கற்றுக்கொடுக்கும் பெற்றோரின் செயல் எத்தகையானது..? அப்படி ஏற்றுக்கொள்ள முடியா சம்பவமாக நடந்தது தான் வேங்கைவயல் சம்பவம்.
கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் வேங்கைவயல் பகுதியில் குடிக்கும் தண்ணீரில் மனிதக்கழிவை கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் தனி நபர் ஆணையம் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையிலும் இதற்கு யார் காரணம் என்பது இன்று வரை மறைவாகவே இருந்து வருகிறது.
இதன் காயம் ஆறும் முன்னே திருநெல்வேலியில் தலைதூக்கியது சிறார்களின் வெறிச்செயல். திருநெல்வேலி நாங்குநேரியில் பள்ளியில் படிக்கும் மாணவரை சகமாணவர்களே கொலை செய்ய முயற்சித்து, சாதிய வன்கொடுமையின் பிடியில் சிக்கினர் பள்ளி சிறார்கள். தாக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரசின் பார்வையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். குற்றத்தில் ஈடுபட்ட சிறார்களின் எண்ணத்தில் மாற்றம் கொள்ள சீர்திருத்தப்பள்ளியின் உதவியை நாடியது தமிழ்நாடு அரசு.
இதைத்தொடர்ந்து, அடுத்த சம்பவமாக அதே மாவட்டத்தில் மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தாமிரபரணியில் குளிக்கச் சென்ற போது மாற்று சமூகத்து இளைஞர்கள் சிலரால் நிர்வாணமாக்கப்பட்டு, சிறுநீர் கழித்து தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கல்வி, உணவில் தலைதூக்கிய சாதியப் பாகுபாடு: போதுமப்பா என்று யோசித்து அமர்வதற்குள் கரூரில் அரங்கேறியது அடுத்தொரு சம்பவம். கரூர் மாவட்டம் வேலன்செட்டியூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் காலை உணவை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமைத்த காரணத்தால் குழந்தைகள் உண்ண அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தது இன்றளவும் வடுவாக நெஞ்சில் நிற்கின்றது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு நேரடியாகச் சென்று அங்கு பெற்றோர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, "பட்டியலின பெண் சமைப்பதை எங்களின் குழந்தைகள் சாப்பிட முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறினார்கள். இதேப்போல் கோவில்பட்டி அருகே முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். விசாரணையில் இதற்கு பெற்றோர்களின் உந்துதலேக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கரூர் உப்பிடமங்கலம் அரசு பள்ளியில் பட்டியலின மாணவர், பேருந்தில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும்போது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பட்டியலின மாணவரின் சாதி பெயரைச் சொல்லி திட்டியுள்ளார். இதை அந்த மாணவர் அவரது பாட்டியிடம் கூறியிருக்கிறார். மாணவரின் பாட்டியோ அந்த 12ஆம் வகுப்பு மாணவரை பேருந்து நிறுத்தத்தில் வைத்து கேட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர் அவரது ஊரில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்று, 10ஆம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது பாட்டியையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.