சென்னை:கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் மதுபான கடைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், "மதுபான சில்லறை கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக் கூடாது. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தது 6 அடி தகுந்த இடைவெளி இருக்க வேண்டும். ஐந்து நபர்களுக்கு மேலான நபர்கள் கடைக்குள் இருக்கக்கூடாது.
முகக் கவசம் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். மதுபானம் மொத்த விற்பனை செய்வதும், 21 வயது நிரம்பாதவர்களுக்கும் மது விற்பனை செய்வதும் கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை கடை மேற்பார்வையாளர்கள் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் அரசுப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை எனப் பலரும் கருத்து தெரிவித்துவந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.