சென்னை:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், அரசு உடனடியாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மதுக்கடைகளை மூட வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை மூடும்படி அம்மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. நோய்த் தொற்றுக்கு மதுக்கடைகள் முக்கியக் காரணமாக உள்ள நிலையில், அவற்றை மூட ஆணையிட்டது மிகச்சிறந்த நடவடிக்கையாகும்.
புதுச்சேரி அரசு மது வணிகம் மூலமாகவே பெருமளவில் வருவாய் பெறுகிறது. மதுக்கடை வருமானம் இல்லாவிட்டால் அரசு நிர்வாகத்தை நடத்துவதே பெரும் சவாலாக இருக்கும் என்றாலும் கூட, அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூடியிருப்பது துணிச்சலான நடவடிக்கை. அதேபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிலும் எடுக்கப்பட வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த அரசு, அவற்றால் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடி திருத்தும் நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை மூடுவதற்கும் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், பலமுறை வலியுறுத்தியும் மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை.