செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த மாதம் 13, 14ம் தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்தனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியை சேர்ந்த 8 பேரும் அடங்குவர்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இரண்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் செய்யூர் பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.