சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வரும் ஸ்ரீதர், நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 10ஆம் தேதி காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது, முன்பக்க ஷட்டர் வெல்டிங் இயந்திரத்தால் அறுத்து எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இச்சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் புகைப்படம், அவர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகின. இதுதொடர்பாக 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கொள்ளையர்களின் சில முக்கிய புகைப்படங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை அடிப்படையாக வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடையில் கொள்ளையடித்த பின், கொள்ளையர்கள் தப்பிச்சென்ற இடங்கள் குறித்த விவரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான இருவருக்கும், பெரம்பூர் நகை கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை தனிப்படை போலீசார் திருவண்ணாமலை விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Villupuram Ashram Case:விழுப்புரம் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி - தேசிய மகளிர் ஆணையம்