சென்னை: ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பு நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மானியத்தில் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியது. இது குறித்து சமீபத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை. மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் என்பது தொடரும்" என விளக்கமளித்தார்.