சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் அமைந்துள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மதேவர் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நாளில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிவதால், புலிகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி, கோவையைச் சேர்ந்த கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருவிழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என நிர்ணயிக்கும்படியும், அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக பக்தர்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிடவும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால் புலிகள் சரணாலயத்தில் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுகிறது எனவும், விழாவில் பலியிடும் விலங்குகளின் கழிவுகளை விட்டுவிட்டு செல்வதாலும், பட்டாசுகளை வெடிப்பதாலும், விறகுகளை பயன்படுத்தி சமைப்பதாலும் சரணாலயத்தில் மாசு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.