கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மது - கமலா தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி, குடிபோதையில் வீட்டுக்கு வந்த மது, கமலாவிடம் வழக்கம்போல் சண்டை போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கமலா, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் உறவினர்கள் சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு கமலாவை அனுப்பிவைத்துள்ளனர். அதன்பின் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த மது, தூங்கிக் கொண்டிருந்த கமலாவின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.
அதில் படுகாயமடைந்த கமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றம், மதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவில், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை என்றும், சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் தனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மது தரப்பு வாதங்கள் மறுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றம் மதுவுக்கு விதித்த ஆயுள் தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது” என தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க:’பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும்...!’ ; போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை