சென்னை:போதையைத் தரும் மருந்துகளையும், கருக்கலைப்பு மாத்திரைகளையும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்த 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாகவும், 6 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை மற்றும் விநியோகம் செய்வது, மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945-இன் படி குற்றமாகும். தமிழக மருந்து கட்டுப்பாடுத் துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருந்துக் கட்டுப்பாட்டுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945-இன் கீழ் விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த ஆறு மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை மற்றும் விநியோகம் செய்த 6 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் இத்துறை மூலம், இனி வரும் காலங்களிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை, விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945-இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதையும் படிங்க:அரசுப் பள்ளிகளில் திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தல்; பிரிண்டர் பிரச்னை.. எமிஸ் பணிகளுக்கு இடையே இதுவுமா? - ஆசிரியர்கள் குமுறல்!