சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என்று அப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இப்படத்தின் தலைப்பை சுருக்கமாக எல்.ஐ.சி என குறிப்பிட்டு, படக்குழுவினர் பதிவுகள் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், பிரபல பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி தரப்பில், விக்னேஷ் சிவனின் அடுத்த படத்திற்கு 'LIC' என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவிற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீஸில், 'LIC' என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிகக் குறியீடு என்றும், அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டி, படத்திற்கு அதே பெயரை பயன்படுத்துவதன் மூலம், தங்கள் நிறுவனத்தின் மீது மக்களும், வாடிக்கையாளர்களும் கொண்டிருக்கும் நன்மதிப்பைக் குறைக்கும் வகையில் உள்ளதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
மேலும், இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றவில்லை என்றால், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எல்.ஐ.சி நிறுவனம் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பரில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் 'லவ் டுடே' படத்தின் இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மேலும் படத்தில் இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மேற்கொள்கிறார். குறிப்பாக, கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகிய இருவரும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்றம் செய்யக்கோரி பிரபல காப்பீட்டு நிறுவனம் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அழகை மட்டும் வைத்து சினிமாவில் நிலைக்க முடியாது.. கத்ரின கைஃபை புகழ்ந்த விஜய்சேதுபதி!