சென்னை:தியாகராய நகர் சாம்பசிவம் தெருவில் வசித்து வருபவர், மனோகரன். புகழ் பெற்ற உணவகத்தின் உரிமையாளரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை வேளச்சேரியில் எல்.ஐ.சி ஏஜென்டாக இருக்கும் ரவீந்திரன் என்பவரிடம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் எல்ஐசி பாலிசி எடுத்து பிரிமியம் தொகையை எல்ஐசியில் செலுத்தி வந்ததாகவும், கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா காலக்கட்டத்தில், ரவீந்திரன் தன்னிடம் எல்ஜசி பிரீமியம் தொகையை தனது வங்கி கணக்கில் செலுத்தினால் தானே எல்ஐசியில் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார்.
பிரிமியம் தொகை மற்றும் எல்ஐசியில் பெற்ற கடன் தொகைக்கான வட்டி ஆகியவற்றை ரவீந்தரின் வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் மனோகரன் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு எல்ஐசிக்கு பணத்தைச் செலுத்தாமல், செலுத்தியது போல போலியான எல்ஐசி ரசீது தயார் செய்து கொடுத்தும், தனது கையெழுத்தை போலியாக போட்டு எல்ஐசிக்கு கொடுத்து தனது முகவரியை மாற்றி மோசடி செய்து 2 கோடியே 54 லட்சத்து 83 ஆயிரத்து 978 ரூபாயை ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவித்து இருந்தார்.
எனவே ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியைச்
சேர்ந்த ரவீந்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவருடைய வீட்டிலிருந்து இரண்டு லேப்டாப்கள், ஒரு ஐ-பேட், இரண்டு பெண் டிரைவ்கள், செல்போன், போலியாக தயாரிக்கப்பட்ட எல்ஐசி ரசீதுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்து விட்டதாகவும், இழந்ததை மீட்பதற்காக மனோகரன் கொடுத்த பிரிமியம் தொகையை மீண்டும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முறையும் தான் வாங்கிய ஷேர்கள் திடீரென வீழ்ச்சி அடைந்ததால், கடனாளியாகிவிட்டதாகவும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் இருப்பதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.