சென்னை :LGBTQI+ மக்களுக்கு ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு வரைவு கொண்டு வருவது சமூக நீதிக்கு எதிரானது எனவும்; திருநங்கைகளுக்கு தனியாக இடஒதுக்கீடு மற்றும் தனிக்கொள்கை வகுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு பேசுகையில், ''கடந்த சட்டப்பேரவை நிகழ்வின் சமூகநலத்துறை மானியத்தின்போது திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை திருநங்கைகள் நடத்திருந்தனர்.
இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி இடஒதுக்கீடு வழங்குவதற்காக (LGBTQI POLICY) என்ற புதிய வரைவுக் கொள்கையை உருவாக்க அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வரைவை 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர்.
LGBTQI+ என்ற சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக ஒரே வரைவுக்குள் உருவாக்குவது என்பது சமூக நீதிக்கு எதிரானது. பல வருடங்களாக கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும் என திருநங்கை சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களில் நடத்தி கோரிக்கை விடுத்திருக்கிறோம். மேலும் நாங்கள் அடிமட்டத்தில் இருக்கும் சமூகம். மேலும் LGBTQI+ மக்களின் வாழ்வியல் உரிமை, தேவை என்பது வேறு, திருநங்கைகளுக்கான வாழ்வியல், உரிமை, தேவை என்பது வேறு.