சென்னை:கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்டத்திலுள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள், அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல, மற்ற மாநிலங்களான டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி அதற்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், “புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் அதேபோல கிளஸ்டர் உருவாகி உள்ள இடங்களில் இருக்கக்கூடியவர்கள் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் இருக்கக்கூடியவர்கள் லேசான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையில் பரிசோதனை எடுக்க வேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களை தமிழ்நாடு எல்லையிலேயே குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரையிலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்கள், அதேபோல பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக தடுப்பூசியும் மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாடு அரசு சார்பாக 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், மார்க்கெட் பகுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடக் கூடிய இடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்து இருப்பதை சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்” உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 10 கோயில்களில் இலவசப் பிரசாதம்- அமைச்சர் சேகர்பாபு