சென்னை: வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, மேற்குதொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்கிழக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் சில உள்மாவட்டங்களில் பருவமழையின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
24 மணி நேரக்கணக்குப்படி மழை நிலவரம்: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் 5.செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து கிளானிலை, மண்டபம், மணியாச்சி, கயத்தார் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும், ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), ராமநதி அணைப் பகுதிகளில் (தென்காசி) தலா 3 செ.மீ மழையும், திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 2 செ.மீ முதல் 1.செ.மீ வரையும் மழை பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தை ஒப்பிட்டு பார்கையில், அக்டோபர் மாதத்தில் 98 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் 171 மி.மீ அளவை இயல்பான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயல்பை விட 43 சதவீதம் குறைவாகவே மழை பதிவானது.