சென்னை: ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி படிப்பில் ஆர்வம் குறைந்த பள்ளி மாணவன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் மீண்டு வந்துள்ளான்.
ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறும்போது, “ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், ‘இணையதள சார்புநிலை மீட்பு மையம்’ 2021ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மையத்தில் சென்னையைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான். நன்றாக படித்து வந்த மாணவன், ஆன்லைன் வகுப்பின்போது வீட்டில் தனியாக இருந்ததுடன் பொழுதுபோக்காக இணையதளத்தில் விளையாட ஆரம்பித்துள்ளான்.
‘ப்ரீபயர், ரோப்லாக்ஸ்’ போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை இரவு 3 மணி வரை விழித்திருந்து நண்பர்களுடன் போட்டி போட்டு விளையாடியதால் மற்றவற்றில் ஆர்வம் குறைந்து வீட்டில் மற்றவர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டான்.
பெற்றோர் கண்டித்தபோது ஆன்லைன் விளையாட்டாளராகி விடுவதாகவும், அதற்கு படிக்கவோ, தேர்வு எழுதவோ தேவையில்லை எனவும் பதிலளித்துள்ளான். மேலும் பசி குறைந்து உடல் எடை குறைந்து, உணவு சாப்பிடும் ஆர்வமும் இல்லாமல் போனான்.