தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; காவல் துறைக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்! - லியோ இசை வெளியீட்டு விழா பிரச்சனை

Leo Audio launch cancel: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாகி உள்ள நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து
லியோ இசை வெளியீட்டு விழா ரத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:24 PM IST

சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், லியோ. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகளை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு மேற்கொண்டு வருகிறது.

மேலும் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றன. இதையடுத்து லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறும் கருத்துகள் மற்றும் குட்டிக் கதைக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியதாகவும், இம்முறை ரஜினியின் பேச்சுக்கு விஜய் பதிலடி கொடுப்பார் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

மேலும், நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் அரசியல் சார்ந்த கருத்துகளை முன்வைப்பாரா, இல்லையா என்ற கேள்விகளும் எழுந்தன. இதற்கிடையேதான் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் திடீரென அறிவித்தது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‛‛லியோ இசை வெளியீட்டு விழா டிக்கெட்களுக்கான கோரிக்கை அதிகப்படியாக உள்ளது. இதனால் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரத்து செய்யப்பட்டதற்கு வேறு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‛‛செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ இசை வெளியீட்டு விழா நடத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தோம். தற்போது அந்த நிகழ்ச்சி ரத்தாகி உள்ளது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம். சிரமத்திற்கு மன்னிக்கவும்” என கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Weekend Movie Release In Tamil: இந்த வாரம் 3 படம் ரிலீஸ்! எந்த படத்திற்கு போகலாம்னு பிளான் பண்ணிட்டீங்களா?

ABOUT THE AUTHOR

...view details