சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ.’ இப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் லியோ படத்திற்கான டிக்கெட் புக்கிங் அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இணைந்து வெளியான மாஸ்டர் திரைப்படம், கரோனா நேரத்தில் வெளியானாலும் வெற்றி பெற்றது. வீடுகளுக்குள் முடங்கி இருந்த ரசிகர்களைத் திரையரங்குகளை நோக்கி வரவழைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் முன்பதிவு லண்டனில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.
மேலும், இத்திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சமீப காலமாக இப்படத்திற்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. லியோ படத்தில் இடம்பெற்ற நா ரெடி என்ற பாடலில் கஞ்சா, புகையிலை பற்றிய வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவ்வார்த்தைகள் மீயூட் செய்யப்பட்டன. மேலும், இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட செய்தி ஏமாற்றத்தைக் கொடுத்தது.