சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தார். இந்த படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்தது. இப்படம் வெளியாகிப் பரவலான வெற்றியைப் பெற்றது. இந்த படம் ரூ.500 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் ஆங்கில திரைப்படத்தைத் தழுவி தன்னுடைய ஸ்டைலில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். விஜய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும், இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி தான்” என்ற பாடலுக்குப் பல எதிர்ப்புகள் வந்தன.
இந்த பாடலில் இடம்பெற்ற புகையிலை, சரக்கு பற்றிய வரிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. இதனால் படத்தில் அந்த பாடல் வரிகள் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாகப் பாடலில் வெறும் இசை மட்டும் வரும் வகையில் படக்குழுவினர் மாற்றியதற்குப் பின் படம் திரையரங்குகளில் வெளியானது.
குறிப்பாக, பத்தாது பாட்டில் எனத் தொடங்கும் இடங்களில் மியூட் செய்து விட்டு இசை மட்டும் படத்தில் இடம்பெற்றது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இன்று (நவ.19) லியோ திரைப்படத்திலிருந்து “நா ரெடி தான்” என்ற பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நான் ரெடி தான் பாடலில் எதிர்ப்புகள் எழுந்த வரிகள் படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், யூடியூபில் வரிகள் ஏதும் நீக்கப்படாமல் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பாடல் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க:விவேக் பிறந்தநாள்; விவேக் உருவத்தை அப்துல் கலாம் படத்தைப் பயன்படுத்தி வரைந்த ஓவியர்!