சென்னை: நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மீ டூ’’ ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பதிவு செய்தனர். அப்போது, பிரபல இயக்குநர் சுசிகணேசனுக்கு எதிராக இயக்குநர் லீனா மணிமேகலையும் ’மீ டூ' குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக பொய்யான குற்றஞ்சாட்டு எனக்கூறி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் அந்த அவதூறு வழக்கு விசாரணை நடைமுறையில் தவறு நடக்கிறது என்றும் குற்றம்சாட்டி, விசாரணை நடத்தி வரும் மாஜிஸ்ட்ரேட் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. எனவே, வழக்கை வேறு மாஜிஸ்ட்ரேட்க்கு மாற்றி உத்தரவிடக்கோரி லீனா மணிமேகலை மனுதாக்கல் செய்திருந்தார். இந்தப் புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லீனா மணிமேகலை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் சுசிகணேசன் தரப்பில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.