தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர்கள் மீதான லஞ்ச நடவடிக்கை வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிய திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.

LED bulb procurement scam against minister sp velumani, adjourn 6 weeks, MHC
LED bulb procurement scam against minister sp velumani, adjourn 6 weeks, MHC

By

Published : Jan 7, 2021, 6:19 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில் முறைகேடு செய்யப்பட்டதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு புகார் அளித்திருந்தார்.

கரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு ஐந்து கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் அப்பாவு புகார் அளித்திருந்தார்.

இந்த இரு புகார்கள் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களைப் பொதுத் துறைச் செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பியுள்ளதாக குற்றஞ்சாட்டி, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பாவு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முன்னிலையாகி, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத் துறைச் செயலர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வழக்குடன் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டுமென கோரிக்கைவைத்தார்.

இதையேற்ற நீதிபதிகள், மூன்று வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாகக் கூறி, வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கூடுதல் ரேஷன் அரிசி வழங்கியதில் முறைகேடு புகார்: முதலமைச்சர், அமைச்சருக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details