சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில், இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நிர்வாகம் மற்றும் மீட்பு பணிகளுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த 4 மாவட்டங்ளுக்கும் நிர்வாக ரீதியாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: வானிலை ஆய்வு மையத்தின் கன மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணத்தினால் வடதமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, திங்கட்கிழமை (டிச.04) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக 4 மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது டிசம்பர் 4ஆம் தேதி அன்று முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.
இந்த புயல் சின்னத்தால் வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:அடுத்த 2 நாட்களுக்கு இந்த 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்!