சென்னை:தேசிய அளவில் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்கு அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஆண்டுத் தோறும் மாணவர்களின் கற்றல் திறனை சோதனை செய்வதற்கான அடைவுத் திறன் தேர்வு நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் தேசிய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராயச்சி குழுமத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது. இந்த கற்றல் அடைவுத் திறன் தேர்வை தமிழ்நாட்டில் 27047 பள்ளிகளில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 700 மாணவர்கள் எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 555 பள்ளிகளில் இந்த தேர்வு நடக்கிறது.
அடைவுத் திறன் தேர்வு நடத்த மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
- தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 3,6,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும்.
- மாணவர்களுக்கான கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு நடைபெறும் பள்ளிக்கு அளிக்கப்பட வேண்டும்.
- அடைவுத் திறன் தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க பிஎட் மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நவம்பர் 3ஆம் தேதி காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும்.
- தேர்வு நடைபெறும் ஆய்வு அலுவலர்கள் தவிர மற்றவர்களை அனுமதிக்க கூடாது. வினாத்தாள் நகலெடுத்தல், பார்த்தல், பகிர்தல் ஆகியவை செய்யக்கூடாது. எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் தேர்வினை நடத்த வேண்டும்.
- அடைவுத் திறன் தேர்வினை கண்காணிக்க, தேர்வு நடத்தும் அலுவலர் வேறு ஒன்றியத்தில் இருந்து வருவார். 3ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு, மற்றும் 9ஆம் வகுப்புகளில் தேர்வு நடைபெறும்.
- எந்த பள்ளியில், எந்த மொழியில், எந்த வகுப்புக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற விபரம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.
- வகுப்பில் 5 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் (EMIS ENROLLMENTன் அடிப்படையில்) இருந்தால் அப்பள்ளியில் தேர்வு நடைபெறாது. வேறு பள்ளி விரைவில் தேர்வு செய்யப்பட்டு NCERTஆல் அறிவிக்கப்படும்.
- பயிற்று மொழி தமிழ் என்றால், தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் தேர்வு நடைபெறும். (ஒரே Question paper) பயிற்று மொழி ஆங்கிலம் என்றால் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்வு நடைபெறும்.
- 3ஆம் வகுப்பு தமிழ் (தமிழ் மொழி), ஆங்கிலம் (ஆங்கிலம் மொழி) 20 கேள்விகள், கணக்கு 20 கேள்விகள் 1 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
- 6ஆம் வகுப்பு தமிழ்(தமிழ் மொழி), ஆங்கிலம் (ஆங்கிலம் மொழி) 25 கேள்விகள், கணக்கு 25 கேள்விகள்
1 மணி 15 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் (தமிழ் மொழி) , ஆங்கிலம் (ஆங்கில மொழி) 30 கேள்விகளும், கணிதம் 30 கேள்விகளும் இடம்பெறும். 1 மணி 30 நிமிடங்கள் தேர்வு நடைபெறும்.
- 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு 2ஆம் வகுப்பு மற்றும் 3ஆம் வகுப்பு கற்றல் அடைவு அடிப்படையிலும், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 மற்றும் 6ஆம் வகுப்பு கற்றல் அடைவு அடிப்படையிலும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 8ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு கற்றல் அடைவு அடிப்படையிலும் கேட்கப்படும்.
- தேர்வு அலுவலர் 2ஆம் தேதியே சீலிடப்பட்ட கேள்வித்தாளை கொண்டு வந்துவிடுவார். சீல் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் 3ஆம் தேதி தேர்வு நடத்தும் அலுவலரால் மட்டுமே திறக்கப்படும் உள்ளிட்ட வழிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேளச்சேரி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே 6 இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நிறைவு!