சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 3,6 மற்றும் 9 ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கற்றல் நிலையைத் தெரிந்து கொள்வதற்கான கற்றல் அடைவுத் திறன் தேர்வு இன்று (நவ 03) நடைபெற்றது. இந்தத் தேர்வினை 27,047 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 42 ஆயிரத்து 700 மாணவர்கள் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் 555 பள்ளிகளில் கற்றல் அடைவுத் திறன் தேர்வு நடத்தப்பட்டது.
ஒரு பள்ளிக்கு 3,6 மற்றும் 9 ம் வகுப்பில் தலா 30 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ஒஎம்ஆர் முறையில் தேர்வு நடத்தப்பட்டது. பள்ளியின் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுக் கண்காணிக்கப்பட்டனர்.
மேலும் வகுப்பறையில் மாணவர்களுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பிரித்து வழங்கப்பட்டு, பொதுத் தேர்வினைப் போல் நடத்தப்பட்டது. தேசிய அளவில் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்கு அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஆண்டு தோறும் மாணவர்களின் கற்றல் திறனை சோதனை செய்வதற்கான அடைவுத் திறன் தேர்வு நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.
அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் தேசிய ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி குழுமத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் என கல்வி பயிலும் 3,6 மற்றும் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு நடத்தப்பட்டன.