சென்னை:உலகளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணரும், சென்னை புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான சாந்தா(93) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜனவரி 19) காலமானார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அரும்முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்த இவர், அந்த மருத்துவமனையை உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனையாக மாற்றி சாதைனை படைத்தார்.
தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநில மக்களும் பயன்படும்படி இலவச சிகிச்சை முறையை நடைமுறைபடுத்தினார். புற்றுநோய் மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து மக்களுக்கு சேவை செய்வதில் தனது வாழ்வை அர்ப்பணித்த மருத்துவர் சாந்தாவின் மறைவிற்கு தலைவர்கள் பலர் அஞ்சலியும், மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப் பெரிய இழப்பு. அவரது சிகிச்சை முறைகள் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நிலைத்து அவரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.
அவரை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இளைப்பாற பிராத்தனை செய்வதாக" கூறியுள்ளார்.
மேலும், "அவரது தன்னலமற்ற சேவையினை கௌரவிக்கும் விதமாக அவரது இறுதிச் சடங்கின் போது, காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய" உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "65 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஓய்வற்ற சமூக சேவையால் அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற மருத்துவர் வி.சாந்தாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால்புரோகித்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உலகின் ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்திற்கும் ஒரு எழுச்சியூட்டும் முன்மாதிரியாக இருந்தவர் மருத்துவர் சாந்தா. அவரை சந்தித்துப் பேச கிடைத்த சில சந்தர்ப்பங்கள் அருமையானவை. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பினை தாங்கிக் கொள்ள அவரது குடும்பத்தினருக்கும், பயனாளர்களுக்கும் பலத்தை அளிக்குமாறு கடவுளிடம் பிராத்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி. சாந்தா உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். இவரது மறைவு மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு. ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.