சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். 'காமெடி டைம்' நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர்.
முத்தமிழறிஞர் கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடியவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும் திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது தீவிர பற்றும், மதிப்பும், மரியாதையும் கொண்டவரும், தீவிர இறை நெறி கொள்கையில் நம்பிக்கை உள்ளவரும், கலை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், தமிழ்த் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகருமான R. மயில்சாமி அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்று பன்முகங்களைக் கொண்டவரும், பழகுவதற்கு இனிய பண்பாளருமான அன்புச் சகோதரர் திரு. மயில்சாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத் துறையினருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், மன வலிமையையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், பலகுரல் கலைஞரும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரும், அவரது புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தவருமான அன்புச் சகோதரர் ஆர்.மயில்சாமி திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த இவருடைய இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.