சென்னை:போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களுடனான அவசர ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா முன்னிலையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழமை நீதிமன்றங்களில் போதைப் பொருள் தடுப்பு வழக்கு விசாரணைகள் குறித்தும் ,பல்வேறு பிரச்சளைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இறுதியில் கீழ்க்கண்ட நடைமுறைகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
போதைப் பொருள் குறித்த வழக்குகளில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகிற நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு முன் வழக்குகள் தமிழ்நாட்டிலோ அல்லது மற்ற மாநிலங்களிலோ உள்ளனவா? மற்றும் தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபடுபவரா? என்பன உள்ளிட்ட வழக்கு குறித்த முழு விவரங்களை உரிய காவல்துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டுப் பெற வேண்டும்.
வரையறுக்கப்பட்ட வணிக அளவிற்கும் அதிகமான எடை கொண்ட போதைப் பொருளெனில்” அவ்வழக்குகளுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்கிற உச்சநீதின்ற / உயர்நீதிமன்ற முன் தீர்ப்புகளையும் போதைப் பொருள் தடுப்புச்சட்டப் பிரிவு 37-யும் சுட்டிக்காட்டி பதிலுரை தாக்கல் செய்து ஜாமீன் அல்லது முன்ஜாமீன் வழங்க கடுமையான ஆட்சேபனை தெரிவிப்பதோடு பதிலுரை அவசியம் தாக்கல் செய்யவேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
பதிலுரை தாக்கல் செய்யப்பட்டும் அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொள்ளாமலும் ஒருவேளை நீதிமன்றம் ஜாமீன் அல்லது முன்ஜாமீன் வழங்கினால் அந்தத் தகவலை உடனடியாக காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கும், சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் தெரிவித்து தகுந்த மேல் நடவடிக்கை எடுக்க தவறாமல் பரிந்துரை செய்ய வேண்டும்
புலன் விசாரணை வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் முடிய தாமதம் ஏற்படின் “அதற்குரிய கால நீட்டிப்பு அறிக்கை உடனடியாக தாக்கல் செய்து குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருவதை தடுக்க வேண்டும். வழக்கின் இறுதி விசாரணையின் போது தேவையற்ற வாய்தாக்களை தவிர்த்து, வழக்கை விரைந்து நடத்தி அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து சாட்சிகளையும் ஆவணங்களையும் சமர்ப்பித்து வழக்கு விசாரணையை விரைந்து முடித்திட வலியுறுத்தப்படுகிறது.
அரசு தரப்பில் சமர்ப்பித்த சாட்சிகளையும் ஆவணங்களையும் சரிவர பரிசீலிக்காமல் விடுதலை செய்யப்படுகிற தீர்ப்புகளின் மீது உடனடியாக காலம் தாழ்த்தாமல் மேல்முறையீடு செய்திட உரிய உயர் காவல்துறை அதிகாரிகளுக்கும், தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் தகவல் அளித்திட வேண்டும்.