விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
’சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - சீமான் விக்கிரவாண்டி பிரச்சாரம்
சென்னை: ராஜிவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகர் புகாரளித்துள்ளார்.
சீமானின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில், அவர் மீது காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் நிறுவனத் தலைவரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜசேகர் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ராஜிவ் காந்தி குறித்து சர்ச்சையாகப் பேசிய சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, சீமான் மீது காங்கிரஸ் சார்பில் இரு புகார்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.