சென்னை : நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 15லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை முடிப்பதற்கு நீதிபதி நியமனம் மற்றும் புதிய மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டத்துறை , சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் மானியக்கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (செப்.7) சட்டப்பேரவையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, “சட்டமும் அரசும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அனைவரும் சட்டத்தின்முன் சமம். புதிய நீதிமன்றங்களை உருவாக்கி குற்றங்களை குறைத்திட சட்ட அறிவு தேவை ,அதை கருத்தில் கொண்டு சட்டக்கல்லூரிக்கு வித்திட்டவர் கருணாநிதி.
தமிழ் வழக்காடு மொழி
இந்தியாவில் 4 மாநிலங்களில் இந்தி நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக உள்ளது. ஆகவே தமிழ் மொழி வழக்காடு மொழியாக ஆக்கும்வரை மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்தி கொண்டே இருப்போம். சைபர் சட்டம், பொருளாதார சட்டம் ஆகியவை நவீனப்படுத்தப்படும். சிறைச்சாலை குற்றம் செய்தவரை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்.
கரோனா காலத்தில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஆர்.டிபிசிஆர் டெஸ்ட் எடுத்து 100 விழுக்காடு கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமே. மன்னர் காலம் தொடங்கி தற்போது வரை நிர்வாகம் என்பது நீதித்தன்மையோடு செயல்பட வேண்டும்.
அனைவரின் அடிப்படை உரிமை, சுதந்திரம், கொள்கை உள்ளிட்ட நம்மை பாதுகாத்திடும் நோக்கில் அரசு அமைத்ததுதான் சட்டம்.