சென்னை: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி சுமார் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களில் அதிகமாக பேசப்பட்ட மற்றும் சில காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் போடப்பட்ட இரண்டு சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் :சென்னையின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான சென்னை துறைமுகம் - மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் 2007 ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க அரசால் முன்மொழியப்பட்டது. இந்த பறக்கும் சாலை திட்டமானது 19 கி.மீ கொண்ட விரைவுச்சாலை ஆகும். மேலும் இந்த உயர்மட்ட விரைவுச் சாலைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009 ஆம் ஆண்டு ரூ. 1,468 கோடி செலவில் அடிக்கல் நாட்டினார்.
இந்த சாலைத்திட்டம் 2013 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அடுத்த வந்த அதிமுக அரசு குறிப்பாக இந்த சாலை கூவம் ஆற்றை ஒட்டி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்புகளை காரணம் காட்டி, இந்த பெரிய திட்டத்தினை கிடப்பில் போட்டது. தொடர்ந்து இந்த திட்டம் மீண்டும் துளிர்க்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த திட்டத்திற்கான நிழற்படத் திட்ட வரைவினை மாற்றி அமைத்து, ஒப்பந்தம் கோர திட்டமிட்டனர்.
எனினும் ஒப்பந்ததாரர்கள் இந்த திட்டத்தினை எடுக்க சிறிது தயக்கம் காட்டினர். பிறகுதான் இந்த திட்டம் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இரண்டடுக்கு பறக்கும் சாலைத்திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை புதுப்பிக்க ₹5,885 கோடி செலவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நான்கு பங்குதாரர்களிடையே கையெழுத்தானது. இதன்படி 21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி சாலை நேரடியாக சென்னையின் எல்லையை துறைமுகத்தோடு இணைப்பதோடு, இரண்டு மணி நேர பயணத்தை 15 நிமிடங்களாக குறைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.