சென்னை:மாநாட்டுக்குத் தலைமையேற்ற எழுத்தாளர் உதயசங்கர், சங்கத்தின் தேவையையும் படைப்பாளிகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் விளக்கினார். சங்கப் பொதுச்செயலாளர் விழியன், "குழந்தைகள் மீது எந்தவிதமான வன்முறை நிகழ்த்தப்பட்டால், அதற்கு எதிராகவும் குழந்தைகளின் நலன் சார்ந்தும் சங்கத்தின் குரல் ஒலிக்கும். குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களை எழுதத் தூண்டும் செயல்களை இச்சங்கம் முன்னெடுக்கும். எழுத்தாளர்கள் எழுதுவதற்கு உரிய உதவிகளையும், கல்வியில் கலை இலக்கியத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும் சங்கம் செயல்படும்" என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சு. தமிழ்ச்செல்வன், கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா. காமராசு, மலையாள எழுத்தாளர் பி.வி. சுகுமாரான், கோவா எழுத்தாளர் ராஜ ஸ்ரீ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
எழுத்தாளர்களின் வாழ்த்துரை
எழுத்தாளர் சு. தமிழ்ச் செல்வன், "குழந்தைகள் நகரம், மாநகரம், கிராமம் உள்ளிட்ட பல அடுக்குமுறைகளில், மாறுபட்ட வாழ்க்கைச் சூழல்களில் வளர்கிறார்கள். அச்சூழலுக்கு ஏற்ற படைப்புகள் நமக்குத் தேவை. குழந்தைகளை கேள்வி கேட்கத் தூண்டினாலே போதும். மேலும், அவர்கள் உலகத்துக்கு அந்நியமானவற்றையும் அங்கீகரிக்க, சமமாக நடத்தும் குணத்தை வளர்த்தெடுக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டியது இக்காலத்தின் அவசியம்" என தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினார்.
புரஸ்கார் விருது பெற்ற ஆயிஷா நடராசன், மற்ற மாநிலங்களில் சிறார் இலக்கியம் என்னவிதமான போக்குகளில் எழுதப்படுகின்றன என்பது குறித்து விரிவாகப் பேசினார். மேலும், தற்போதைய சூழலுக்கு ஆடியோ வடிவில் புத்தகங்களை இயற்றவேண்டிய தேவை குறித்தும் விளக்கிப்பேசினார்.