மிக நீண்ட கால ஆழ்ந்த யோசனைக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று ரஜினி தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டரில், "தமிழ்நாடே ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த முடிவை ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ஜனவரி 2021இல் அவர் தனது கட்சியை தொடங்கவுள்ளதாக முடிவு செய்துள்ளார்.
அவரது திரைப்பட வசனத்தில் வருவதைப்போல 'லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக' முடிவெடுத்துள்ள ரஜினிக்கு வாழ்த்துகள். 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாடு ஆன்மிக அரசியல் பக்கம் திரும்பும்" என்று பதிவிட்டுள்ளார்.
'மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்'
கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "வரும் சட்ட மன்றத் தேர்தலில் மக்களுடை பேராதரவுடன், வெற்றிப் பெற்று நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மத சார்பற்ற ஆன்மிக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!
ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு, சுமார் 30 ஆண்டுகளாக காத்திருக்கும் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அரசியல் பிரவேசம் குறித்த இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.
ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்துவந்ததில் மிக முக்கிய நபராக கருதப்படுபவர் ஆடிட்டர் குருமூர்த்தி. இதற்கு முன், பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்தபோதும் அவரை சந்தித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! ஜனவரியில் கட்சி' - ரஜினிகாந்த்!